செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

Published On 2021-08-19 09:50 IST   |   Update On 2021-08-19 09:50:00 IST
வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,773 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,364 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.07 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று அதிகரித்து 44.66 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு நேற்று 30 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இன்று 32 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News