செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் காயம் பெற்ற மீனவர் கலைச் செல்வன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு - ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து காயம்

Published On 2021-08-02 07:14 GMT   |   Update On 2021-08-02 07:14 GMT
வேதாரண்யம் அருகே ஆழ்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டிணம்:

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினர் அத்துமீறி தாக்குவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதில் பல நேரங்களில் உயிர்ச்சேதங்களும், அதிக பொருட் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே ஆழ்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக இன்று(திங்கட்க்கிழமை) இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதன்விபரம் வருமாறு:-

நாகப்பட்டிணம் நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீச்சாங்குப்பம் மீன்படி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி அக்கரை பேட்டை கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைபேட்டையை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 33), தீபன்ராஜ்(32), ஜீவா(32), மாறன்(55), அரசமணி(31), முருகானந்தம் (35) மோகன் (40), ராமச்சந்திரன்(47), ஆனந்த்(30) உள்ளிட்ட 10 பேர் ஆழ் கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.

பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தகதாக கூறி படகில் இருந்த மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் கொடூரமாக சுட்டனர்.

இதில் கலைக்செல்வனின் இடதுபக்க தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அடுத்த நொடி அவர் ரத்த வெள்ளத்தில் படகில் சாய்ந்தார். அதிர்ஷ்டவசமாக மற்ற 9 மீனவர்களும் காயமின்றி தப்பினர்.

அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே நாகைக்கு அதே படகில் காயமடைந்த கலைச்செல்வனை அழைத்துக்கொண்டு கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்தனர். பின்னர் ஒரு ஆட்டோ மூலம் நாகப்பட்டிணம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி வேதாரண்யம் கடற்படை காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, தாங்கள் மீன்பிடித்த பகுதி தமிழக கடற்பகுதியாகும். இலங்கை கடற்படை அத்துமீறி எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினோம் என பீதியுடன் தெரிவித்தனர்.


Tags:    

Similar News