செய்திகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கூடுதல் முகாம்கள் அமைக்க வேண்டும்- விஜயபாஸ்கர்

Published On 2021-06-03 14:49 IST   |   Update On 2021-06-03 14:49:00 IST
சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

மேலும் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கூடுதல் முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் நான் எடுத்துக் கூறியபடி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று மண்டல அளவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி நோய் இருக்கிறதோ அதன்படி பொதுமக்கள் நடக்க வேண்டும். முக கவசம் ஆயுதம் என்றால் தடுப்பூசி என்பது பேராயுதம்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News