செய்திகள்
கருப்பு பூஞ்சை

ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2021-06-02 09:38 GMT   |   Update On 2021-06-02 09:38 GMT
ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சி நேரு நகரை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதித்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். சர்க்கரை நோயாளியான அவருக்கு திடீரென கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின்படி அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதேபோல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரியை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சர்க்கரை மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரென அவரது வலது கண்ணுக்கு கீழ், கன்னத்தின் மையப்பகுதியில் கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு பூஞ்சை பயத்தால் அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரிய வரும்.

Tags:    

Similar News