செய்திகள்
3 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு கொரோனா விழிப்புணர்வு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு அலங்காரம்

Published On 2021-05-19 12:50 IST   |   Update On 2021-05-19 12:50:00 IST
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக டிசம்பர் மாதம் முதலே பூங்காவை தயார் செய்வார்கள்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.

இவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடப்பது வழக்கம். குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக டிசம்பர் மாதம் முதலே பூங்காவை தயார் செய்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை விழா நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த டிசம்பர் மாதமே பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்து ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

இதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் 2-வது அலையால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கின்றன. பூங்காக்களில் உள்ள மலர்களை ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பல வண்ண மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கோவிட் 19 வேக்சினேட் யுவர்செல்பேன் என ஆங்கிலத்தில் மலர் தொட்டிகளை அடுக்கி வைத்து மலர் அலங்காரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த மலர் அலங்காரத்தை உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் பூங்கா நிர்வாகம் வழக்கம் போல கோடை காலத்தின் போது மேற்கொள்ளப்படும் மலர் அலங்காரத்தை இம்முறை வித்தியாசமான முறையில் மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது கொரோனா வைரஸ் வடிவிலான மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News