செய்திகள்
கிராமத்திற்குள் நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கம்புணரி அருகே கொரோனா பாதித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது

Published On 2021-04-13 09:13 GMT   |   Update On 2021-04-13 09:13 GMT
சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊராட்சியை சேர்ந்த சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் 136 மக்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் வெளியூர் சென்றவர்கள் தவிர 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினர், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தலைமையிலான ஊரகத்துறை அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி நபிஷா பானு தலைமையிலான சுகாதாரத்துறை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சுகாதார பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்,

மேலும் அந்த கிராமத்தில் முகாமிட்டு கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அந்த கிராமத்தில் தற்சமயம் வாழ்ந்து வரும் 92 பேர்களுக்கு நோய் தோற்று சம்பந்தமான மாதிரிகள் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சுகாதார பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் சேர்வைகாரன் பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராம உதவியாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து இக்கிராமத்திற்கு அருகில் உள்ள பிரான்மலையில் தனியார் மருந்து கடைக்கு சென்று தனி நபர்களுக்கு காய்ச்சலுக்காக மருந்துகள் வழங்கக்கூடாது, காய்ச்சல் தேவைகளுக்காக மருந்து வாங்க வருபவர்கள் பற்றிய விபரங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News