செய்திகள்
ஜிகே வாசன்

கொரோனா பாதிப்பை தடுக்க அரசுக்கு மக்கள் உதவ வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Published On 2021-03-18 13:01 IST   |   Update On 2021-03-18 13:01:00 IST
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த வேளையில் மீண்டும் பரவல் அதிகமாகி இருப்பதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்தவும், அதில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்புகளை பொது மக்கள் கடைப்பிடித்து அரசுக்கு உதவிகரமாக இருந்து கொரோனாவினால் இனி பாதிப்பில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த வேளையில் மீண்டும் பரவல் அதிகமாகி இருப்பதை பொதுமக்கள் மிக முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இதுவரை 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதும், தொடர்ந்து பொது மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருவதும் நல்ல பலனிக்கிறது.

ஆனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மீண்டும் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா பரவல் அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி இருக்கின்ற வேளையில் நேற்றைய தினம் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இப்போதும் கொரோனா பரவல் அதிகமாகி இருக்கின்ற சமயத்தில் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பினர், காவல்துறையினர் மேற்கொள்கின்ற சிறப்பான நடவடிக்கைகள் பொது மக்கள் நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பதால் அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு, சுகாதாரத்துறை அறிவிக்கும் அறிவிப்புகளை தமிழக மக்கள் கவனத்தில் கொண்டு, வெளியிடும் நெறி முறைகளை முழுமையாக கடைப்பிடித்து அரசுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News