செய்திகள்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இன்று இயக்கப்பட்ட பஸ்கள்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை

Published On 2021-02-25 09:21 GMT   |   Update On 2021-02-25 09:21 GMT
வேலூரில் இருந்து சென்னை பெங்களூரு செல்லக்கூடிய பஸ்கள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
வேலூர்:

போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது. கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். விடுமுறை எதுவும் எடுக்க அனுமதி கிடையாது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடைய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இன்று காலை முதல் இயக்கப்பட்டன. வேலூரில் இருந்து சென்னை பெங்களூரு செல்லக் கூடிய பஸ்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலானவை ஓடவில்லை. தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

திருப்பத்தூர் நகரப்பகுதிகளில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு பஸ்கள் 50 சதவீதத்துக்கு மேல் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 350 தனியார் பஸ்கள் உள்ளன. இந்த தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்பு இல்லை. நகரப் பகுதிகளுக்குச் செல்ல கூடிய பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 30 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்தால் அனைத்து பஸ்களையும் இயக்கலாம். ஆனால் இன்று காலையில் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம் என்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் இருந்து இன்று 45 டவுன் பஸ்களும், 55 ரூட் பஸ்களும் இயக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்கள் 100 சதவீதமும், ரூட் பஸ்கள் 50 சதவீதமும் இயக்கப்பட்டன. திருவண்ணாமலையில் தனியார் பஸ்கள் இன்று அதிக அளவில் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் ஆட்டோக்களில் பயணம் செய்யும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் சென்றனர்.
Tags:    

Similar News