செய்திகள்
மலர்களை பேக்கிங் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளி.

நாளை காதலர் தின கொண்டாட்டம்- ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி

Published On 2021-02-13 15:11 IST   |   Update On 2021-02-13 15:11:00 IST
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ரூ.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
ஓசூர்:

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த நாளில் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்கள், பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். மேலும் சுற்றுலா தலங்களில் சந்தித்து உற்சாகமாக பொழுதை கழிப்பதும் வழக்கம். ரோஜாப் பூக்களையும், காதலர் தினத்தையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.

காதலர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பயிரிடப்படும் ரோஜாப்பூக்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கை. ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்து 1,300 ஏக்கரில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் 800 ஏக்கரில் தரமான ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்து, பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளில் ரோஜா மலர்களுக்கான தேவை அதிகரிக்கும்.

காதலர் தின வர்த்தகத்தை முன்னிட்டு ஏற்றுமதி செய்வதற்காக ஓசூரில் ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால், ஓசூரில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கொரொனா பாதிப்பு காரணமாக ரோஜா சாகுபடி யின் பரப்பளவும், ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக மலர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

செழிப்பான மண்வளத் தையும், சீரான தட்ப வெப்பநிலையையும் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் கொண்டுள்ளதால் அங்கு, சாகுபடி செய்யப்படும் ரோஜாக்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டுவரை, நிலைமை இப்படி இருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்ட‌ங்களுக்காக சுமார் 2 கோடி அளவில் ரோஜா ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தனர். சீனா, ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக அங்குள்ள ரோஜாக்களுக்கு மவுசு குறைந்தது. இதனால் பன்னாட்டு சந்தையில் ஒசூர் ரோஜாவுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகளவில் வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர் ரோஜா சாகுபடி விவசாயிகள். ரோஜா விவசாயத்தை நம்பி ஓசூர் பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ரூ.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆர்டர்கள் வராமல் போனதால், ரோஜா விவசாயிகளை, காதலர் தினம் கவலையில் அடைய‌ செய்துள்ளது.

Similar News