செய்திகள்
கோப்புப்படம்

இணையதளத்தில் சொத்துக்களின் வில்லங்க விவரம் வெளியீடு- பதிவுத்துறை தகவல்

Published On 2021-02-13 03:40 GMT   |   Update On 2021-02-13 03:40 GMT
இணையதளத்தில் சொத்துக்களின் வில்லங்க விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் தட்சிணாமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவுத்துறையின் சேவைகளை பொதுமக்களுக்கு நேரடியாக அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் விதமாக இத்துறையின் சேவைகள் படிப்படியாக கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆவண பதிவும், திருமண பதிவும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆவணம் மற்றும் திருமண பதிவு செய்வதற்கு இணையவழியாக மனு சமர்ப்பிக்கவும், முன்பதிவிற்குமான சேவை தற்போது நடைமுறையில் உள்ளது. அதேபோல் இணையவழியில் சொத்துக்களின் வில்லங்க விவரங்கள் இத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களை சேர்ந்த சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வில்லங்க விவரங்களை 1969-லிருந்தும், மாகி மற்றும் ஏனாம் பிராந்திய சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வில்லங்க விவரங்களை 2007-லிருந்தும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

தற்போது 11-2-2021 முதல் 2007-ம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட ஆவணங்களின் நகல்களும், 2018 முதல் பதியப்பட்ட திருமண பதிவு சான்றிதழ் நகல்களும் இத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்துறையின் சேவைகளை வலைதள இணைப்பான https://regn.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News