செய்திகள்
உயிரிழப்பு

காட்டுபன்றி என்று நினைத்து நண்பர் சுட்டதில் ஒருவர் பலி

Published On 2021-02-12 07:32 GMT   |   Update On 2021-02-12 07:32 GMT
வனப்பகுதி அருகே காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் நண்பர் பலியான சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 40).

இந்த நிலையில் இவரும், இவரது நண்பரான அஞ்செட்டி அடுத்த சிக்கமஞ்சு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (27) என்பவரும் நேற்று இரவு காட்டுப்பன்றிகளை வேட்டையாட வனப்பகுதிக்கு சென்றனர். இருவரும் ஆளுக்கு ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக் கொண்டு இருட்டான வனப்பகுதியில் காட்டுப் பன்றிகளை தேடி அலைந்தனர்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அஞ்செட்டி அருகே சிக்க மஞ்சு வனப்பகுதியில் பசப்பாவும், நாகராஜிம் வேறு வேறு திசைகளில் சென்று காட்டுப்பன்றிகளை கண்காணித்தப்படி இருந்தனர்.

அப்போது திடீரென ஏதோ ‘சலசல’ சத்தம் கேட்டதால் துப்பாக்கியுடன் இருந்த நாகராஜ் உஷாரானார். காட்டுப்பன்றி தான் வருகிறது என்று நினைத்து சத்தம் வந்த திசையை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டார். அப்போது அய்யோ... என்று கத்தியப்படி பசப்பா கீழே விழுந்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், ஓடி வந்து பார்த்தார். அப்போது மார்பில் குண்டு பாய்ந்து பசப்பா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் பசப்பா பலியானது நாகராஜிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதிக்கு சென்ற சிலர், பசப்பா குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அஞ்செட்டி வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது,

உடனே அவர்கள் வனப்பகுதிக்கு விரைந்து சென்று பசப்பா உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி இருந்து வரும் நாகராஜை வனத்துறையினரும், போலீசாரும் தேடி வருகிறார்கள்.

காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் நண்பர் பலியான சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News