செய்திகள்
கைது

ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை- முக்கிய குற்றவாளியின் தந்தை மும்பையில் கைது

Published On 2021-02-10 06:22 GMT   |   Update On 2021-02-10 06:22 GMT
கண்டெய்னர் லாரியில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியின் தந்தையை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
ஓசூர்:

சென்னையில் இருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி புறப்பட்டு சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை என்ற இடத்தில் சென்றபோது ஒரு மர்ம கும்பல் , டிரைவர்களை தாக்கி கண்டெய்னர் லாரியில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் பற்றி தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரத் தேஜ்வாணி (வயது 37), அமிதாப் பாத்தா, ராஜேந்திரா சவுகான், பவானி சிங், கமல்சிங், இந்தூரை சேர்ந்த அமீர்கான், பரத் அஸ்வாணி மற்றும் ஹேமர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர்.

மேலும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகித் (26), சஜகான் சைமன் (33), ஆகியோர் ஓசூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான பரத் தேஜ்வாணியின் தந்தை வினோத் தேஜ்வாணி (வயது 61) துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார். அவர் பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அனுப்பி இருந்தனர். அதனால் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை அங்கிருந்த அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தனிப்படை போலீசார் அங்கு சென்று வினோத் தேஜ்வாணியை நேற்று அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News