செய்திகள்
கைது

வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2021-02-05 11:30 IST   |   Update On 2021-02-05 11:30:00 IST
நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு போலீஸ் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்து கொண்டிருந்தார்.

வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களும் வைத்திருந்த போதும் அவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிலர் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் உடையில் பணம் வசூலில் ஈடுபட்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் போலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் அவர் குடியாத்தம் அடுத்த ஓலக்காசியை சேர்ந்த முருகதாஸ் (வயது 28)என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முருகதாசை கைது செய்தனர். மேலும் இதுபோல் வேறு எங்காவது பணம் வசூலில் ஈடுபட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News