செய்திகள்
கனிமொழி

அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிய வேண்டும்- கனிமொழி பேச்சு

Published On 2021-01-29 09:43 GMT   |   Update On 2021-01-29 09:43 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஒரு விடியலை தமிழகத்தில் ஏற்படுத்துவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சரியாக வேலை வழங்குவதில்லை. முறையாக கூலி வழங்குவதும் இல்லை.

தமிழகம் சுயமரியாதையை இழந்து நிற்கிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை வரவேற்றுள்ள கட்சி அ.தி.மு.க., முதுகெலும்பு இல்லாத முதல்-அமைச்சர் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. பச்சை துண்டு போட்ட முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கின்றார்.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் டெல்லியில் இருந்து தமிழகத்தின் ஆட்சியை இயக்குகின்றனர். தமிழகத்தின் அடையாளங்கள், உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துள்ள இத்தகைய பயனற்ற ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஒரு விடியலை தமிழகத்தில் ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன், ஒன்றியச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகரச்செயலாளர் அழகப்பன், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணைச்செயலாளர் சின்னையா, பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News