செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

பள்ளி மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி உரையாடல்- கல்வித்துறை இயக்குனர் தகவல்

Published On 2021-01-20 04:06 GMT   |   Update On 2021-01-20 04:06 GMT
புதுவையில் வருகிற 25-ந் தேதி பள்ளி மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பேடி உரையாடல் நிகழ்த்த உள்ளார்.
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடி நேற்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகளிடம் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது கவர்னர் அளித்த உத்தரவின் பேரில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களிடம் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம், கல்வி சம்பந்தமான மட்டுமல்ல நிர்வாக திறமையை வளர்த்துக்கொள்வதோடு, மாணவர்களுக்கு அவர்களும் ஒரு வகுப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறும்போது:-

ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறையையும், அவர்கள் சரிவர பாடம் கற்பிக்கிறார்களா என கூர்ந்து கவனித்திட வேண்டும். பள்ளிகளை நல்ல முறையில் இயக்குவதை உறுதி செய்திட வேண்டும். மாணவர்கள் பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்களின் நிலைப்பற்றி ஆராய்ந்து பெற்றோர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும்.

எதிர்கால படிப்புகள் குறித்து தெளிவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு, எந்த படிப்புகளை படிக்கலாம் என விளக்கி வழிகாட்டி தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். அவர்களை அதற்கான போட்டி தேர்வு உள்பட அனைத்திற்கும் தயார் செய்திடவும், படித்து உயர் நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களின் உதவியை நாட வேண்டும். பள்ளி நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு அன்றாட செய்தி தாளின் மூலம் பொது அறிவை உண்டாக்குதல் மற்றும் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

கல்வி சாராத கலை, ஓவியம், கைவினை, விளையாட்டு மற்றும் இசை போன்ற பயனுள்ள செயல்பாடுகளை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தனித்திறன் ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க வேண்டும். பள்ளியில் பயன்பாடற்று, வினியோகப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கும் பாடநூல்கள், குறிப்பேடுகள், சைக்கிள்கள், சீருடைகள் போன்றவற்றை ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.

தேசிய மாணவர் படையிலும், தேசிய சேவை திட்டத்திலும் சேர்ந்துள்ள மாணவர்கள் முதலில் தங்கள் பள்ளிகளிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு சேவை மற்றும் தூய்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். குடியரசு தினத்தையொட்டி வருகிற 25-ந் தேதி காலை கவர்னர் கிரண்பேடி அரசு பள்ளி மாணவர்களுடன் ‘பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச்செய்தல்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News