செய்திகள்
கமல்ஹாசன் பிரசாரம்

ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்- கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-01-07 09:22 GMT   |   Update On 2021-01-07 09:22 GMT
அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
வேலூர்:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை திறந்தவேனில் கொட்டும் மழையில் பேசினார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூரின் சிறப்பு சிப்பாய் புரட்சி. எழுச்சி கொண்ட மண்ணாகும்.

வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அதில் சிப்பாய் புரட்சி தோற்க காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே.

தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்காக வைத்துவிட்டேன்.

நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நாம் நாற்காலியை பிடிப்பது உட்கார அல்ல, உட்காராமல் மக்கள் சேவை செய்ய.

நீங்கள் எல்லோருமே தலைவர்கள். நான் உங்களை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.

மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். அது மற்ற எந்த கட்சியிலும் கிடையாது.

வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக் கொண்டுள்ளோம். அனைத்தும் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்பதை தற்போது ஏளனம் செய்கின்றனர். நாளை இதனை அமல்படுத்தும்போது உலகம் நம்மை பாராட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல. மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதனை கருத வேண்டும்.

அரசுக்கும், மக்களுக்கும் இடையே அது தொடர்பை ஏற்படுத்தும். அரசின் சேவைகளும் எளிதில் கிடைத்து விடும். அரசின் சேவையை மக்கள் பெறுவது உரிமை. அதை அரசு தேடி வந்து தர வேண்டும். அதற்கான இடர்பாடுகளைக் களைந்திடவே வீட்டுக்கு ஒரு கணினி திட்டமாகும்.

விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.

சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஒரே கட்சி நாம் தான். பேசுவது மட்டும் அல்ல அதற்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம்.

சரித்திரம் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பு அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் நேர்மைக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர் இதில் பங்கேற்று கொள்ளுங்கள். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஆரணி சுற்றியுள்ள கோட்டை மைதானங்கள் சரியாக பராமரிக்கப்பட்டால் உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக ஆரணி மாற வாய்ப்புள்ளது.

அதனை செய்யும் திட்டம் எல்லாம் எங்களிடம் உள்ளன. சிறிய நகரங்களை பெரிய நகரங்களுக்கு நிகராக மாற்றி காட்டுவோம். எங்களால் நிறைவேற்றி காட்ட முடியும். எங்களின் கனவு இதற்காக மக்கள் நீதி மய்யத்தின் கரத்தை வலுப்படுத்துங்கள்.

இங்கு கூடி இருக்கும் கூட்டம் பேச்சு கேட்டு கலைகின்ற கூட்டமாக இல்லாமல் பரப்புரை செய்யும் கூட்டமாக மாற வேண்டும்.

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை மாற்ற முடியும். அதை நிரூபித்து காட்ட மக்கள் நீதி மையத்தால் முடியும். ஏன் மக்கள் நீதி மய்யத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இங்கே வந்திருக்கும் இளைஞர்கள் மக்கள் மத்தியில் கூற வேண்டும். ஒவ்வொருவரும் பரப்புரையாளர்களாக மாற வேண்டும்.

நாங்கள் மக்களுக்காக அறிவார்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தகளுடன் கேட்டு தெரிந்து ஆராய்ந்து பல திட்டங்களை வைத்திருக்கிறோம். அந்த திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும். அப்போது நாங்கள் இருக்க வேண்டும். அது சீக்கிரத்தில் நடக்க வேண்டும்.

நாங்கள் தாமதமாக வந்தாலும் வேகம் எடுத்து விட்டோம். நாங்கள் எங்கு சென்றாலும் வெயில் மழை பாராமல் மக்கள் ஏராளமாக கூடுகிறார்கள். புதிய தமிழகத்தை உருவாக்க ஒரு கருவி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த கருவியாக நான் இருப்பேன். ஊர் கூடி தேர் இழுத்தால் வெற்றி நிச்சயம் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News