செய்திகள்
யானை

ஈரோட்டில் யானை மிதித்து விவசாயி பலி

Published On 2021-01-04 01:05 GMT   |   Update On 2021-01-04 01:05 GMT
ஈரோட்டில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் மாரி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். அவற்றை அறுவடை செய்து தோட்டத்தில் கொட்டி குவித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு காவலுக்காக தோட்டம் அருகே இருந்த குடிசையில் அவர் படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை மாரி படுத்திருந்த குடிசையை காலால் எட்டி உதைத்து துவம்சம் செய்தது. அப்போது உள்ளே படுத்திருந்த மாரி எழுந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை துதிக்கையால் அவரை பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதனால் அலறி துடித்த மாரி உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.

சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்டத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயிகள் அங்கு ஓடிவந்தார்கள். அதற்குள் அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து விவசாயிகள் கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் கடம்பூர் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று மாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News