செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் வருகிற 8-ந் தேதி முதல் போராட்டம்

Published On 2021-01-01 08:00 GMT   |   Update On 2021-01-01 08:00 GMT
வருகிற 8-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடந்த 4½ ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருப்பு சட்டை அணிந்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினார்.

6 நாட்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல் வடிவம் பெறவில்லை.

இதற்கு, கவர்னரின் முட்டுக்கட்டையே காரணம் என்பதை வெளிப்படுத்தவும், கவர்னரை கண்டித்தும் மீண்டும் போராட்டம் நடத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க. தவிர கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவு அமைப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் கோரப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 அறிவிக்கப்பட்டுள்ளதை போல புதுவையிலும் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பொங்கல் பரிசு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கவர்னர் மாளிகை முன்பு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அறிவிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து சந்திக்க புதுவை தி.மு.க.வினர் விரும்பவில்லை.

இதனை தங்கள் கட்சி தலைமையிடமும் புதுவை தி.மு.க.வினர் தெரிவித்து தனித்து போட்டி, அல்லது மாற்று கூட்டணி என்ற ஆலோசனையையும் முன் வைத்துள்ளனர். சமீபகாலமாக காங்கிரசுடன் புதுவை தி.மு.க.வினர் எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

இதனால், காங்கிரசின் கவர்னரை கண்டிக்கும் போராட்டத்திலும் புதுவை தி.மு.க.வினர் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News