செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி - முதலமைச்சர் நாராயணசாமி

கவர்னர் தடை - நாராயணசாமி அனுமதி: புதுவையில் புத்தாண்டு கொண்டாடுவதில் குழப்பம்

Published On 2020-12-23 08:23 GMT   |   Update On 2020-12-23 08:23 GMT
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள்.

வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல், மதுபானங்கள் விலை உயர்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.

இதனை உறுதிபடுத்தும் வகையில் கவர்னர் கிரண் பேடி, புதுவை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி புதுவையில் பொது இடங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட அனுமதியில்லை என கலெக்டர் பூர்வா கார்க்கும் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடையில்லை. சமூகஇடைவெளி, முக கவசத்துடன் விழாக்களை கொண்டாடலாம். விழாவிற்கு தடை போட யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு 200 பேர் வரை அனுமதிக்கலாம் என அதிரடியாக தெரிவித்தார். இதற்கு பதிலாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் அவருடன் பக்கத்து சீட்டில் பயணித்த புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமையில் உள்ளார்.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டு கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் விழாக்களை கொண்டாடவும், கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூடவும் தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மக்கள் புதுவைக்கு அதிகமாக வரும் வாய்ப்புள்ளது.

தற்போது புதுவையில் கொரோனா பரவி வரும் நிலையில் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தால் சுற்றுலா பயணிகள், வெளிமாநிலத்தினர் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு கவர்னர் பதிவிட்டுள்ளார்.

இதனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதுவை கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதலால் அரசு திட்டங்கள், விழாக்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

இதில் கவர்னர் பக்கம் தான் அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் உத்தரவில்லாமல் அரசு துறைகள் இயங்காது. கொரோனா ஊரடங்கு தளர்வில் கடைகள், வணிக நிறுவனங்களை காலை 9 மணி முதல் திறக்க நாராயணசாமி உத்தரவிட்டார்.

ஆனால் போலீசார் எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்று கூறி கடைகளை அடைக்கும்படி கூறினர். எனவே, முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்மொழி உத்தரவிட்டாலும், அரசு அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ உத்தரவு கிடைத்தால் மட்டுமே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும்.


Tags:    

Similar News