செய்திகள்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது- கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

Published On 2020-12-16 03:53 GMT   |   Update On 2020-12-16 03:53 GMT
நிவர் புயல் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
குடியாத்தம்:

நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் மோர்தானா அணை நிரம்பி, கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மோர்தானா அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல ஏரிகள் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் ஏரிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி, எர்த்தாங்கல் ஏரி, செட்டிக்குப்பம் ஓட்டேரியை கலெக்டர் பார்வையிட்டு மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் எம்.சண்முகம், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா, ஒன்றிய பொறியாளர் சிலம்பரசன், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 பெரிய பாசன ஏரிகள் உள்ளது. அதில் தற்போது 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 6 ஏரிகள் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்ட உள்ளன. மோர்தானா அணை 260 மில்லியன் கன அடியும், ராஜதோப்பு அணை 20 மில்லியன் கன அடியும் கொள்ளளவு கொண்டது. தற்போது சதுப்பேரி ஏரி 30 சதவீதம் நிரம்பி உள்ளது.

பொன்னை அணைக்கட்டு மூலம் 18 ஏரிகளும், மோர்தானா கால்வாய்கள் மூலம் 19 ஏரிகளும் நிரம்புவதால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. கரும்பு விளைச்சல் இல்லாததால் ஆம்பூர் சர்க்கரைஆலை திறக்கப்படவில்லை. இந்தாண்டு 10 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் இந்தாண்டு ஆம்பூர் சர்க்கரைஆலை திறக்க வாய்ப்புள்ளது. அம்முண்டி சர்க்கரைஆலை கரும்பு அரவைக்காக இம்மாதம் 21-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளும், நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் பொங்கல் பண்டிகை விவசாயிகளின் மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாகும். தற்போது நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 800 அடியில் இருந்த தண்ணீர் தற்போது 200 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் இது 100 அடிக்கு கீழே தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News