செய்திகள்
கல்தூண்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி
கல்தூண்கள் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் மீது அமர்ந்து வந்த 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக கட்டை அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட கல்தூண்களை வாங்குவதற்கு ஆந்திர மாநிலம் வீ.கோட்டா பகுதியை சேர்ந்த ஏஜெண்டு மூலம் ஆர்டர் கொடுத்துள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 60 கல்தூண்களை ஏற்றிக்கொண்டு கீழ்கொத்தூருக்கு லாரி புறப்பட்டு வந்தது. லாரியை குப்புசாமி என்பவர் ஓட்டி வந்தார். கல்தூண்களை இறக்குவதற்காக 3 தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிய கல்தூண்கள் மீது படுத்து தூங்கிக் கொண்டுவந்தனர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை ஏரிக்கொல்லை பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்தூண்களின் பாரம் தாங்காமல் அதன் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேரும் சரிந்த தூண்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.