செய்திகள்
கண்ணமங்கலம் பகுதியில் மழை காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதை காணலாம்

கண்ணமங்கலம் பகுதியில் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்

Published On 2020-11-27 08:19 IST   |   Update On 2020-11-27 08:19:00 IST
கண்ணமங்கலம் பகுதியில் மழை காரணமாக ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
கண்ணமங்கலம்:

நிவர் புயல் காரணமாக கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு, அனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேலும் தென்னை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.

சுமார் 1 லட்சத்துக்கும் மேலான வாழை மரங்கள் பல்வேறு கிராமங்களில் சேதமடைந்து விட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலசபாக்கம் அருகே நாயுடு மங்கலம் கூட்ரோடு, நாயுடுமங்கலம் சோடா கடை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பெரிய புளிய மரங்கள் சாலையில் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது திருவண்ணாமலை நோக்கி வந்த மினி லாரி மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போன்று கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி, கடலாடி, கேட்டவரம்பாளையம், அரிதாரிமங்கலம், சீராம்பாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலாடி போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சென்று மரங்களை அப்புறப்படுத்தினர்.

செங்கத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. புயல் காற்று வீசியதில் குப்பநத்தம், கிளையூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் அடியோடு சாய்ந்தது.

அதேபோல் செங்கத்தில் இருந்து பரமனந்தல் செல்லும் சாலையில் காந்திநகர் அருகே சாலை நடுவே புளியமரம் ஒன்று சாய்ந்தது. இதனை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் வெட்டி அகற்றினர்.

அதேபோல செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள வீரானந்தல்-சாமாலை சாலையில் புளியமரம் ஒன்று வீடுகளின் மீது சாய்ந்தது. இதில் 2 வீடுகளின் முன் பகுதி சேதமடைந்தது. மேலும் புளியமரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. பகல் நேரத்தில் புயலின் தாக்கம் காரணமாக விட்டுவிட்டு செங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேபோல் ஜமுனாமரத்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக குப்பநத்தம்அணை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் குப்பநத்தம் அணைக்கு நீர் வர தொடங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Similar News