செய்திகள்
ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது

Published On 2020-11-27 07:53 IST   |   Update On 2020-11-27 07:53:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்தது. நேற்று சில பகுதிகளில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. நிவர் புயலால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 குடிசை வீடுகள் பகுதியாகவும், 14 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஓட்டு வீடு, சீட்டு வீடுகள் 24 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் 7 மாடுகள், 4 கன்றுகள், 7 ஆடுகள் உயிரிழந்து உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலையான மருத்துவ முகாம்கள் 9-ம், நடமாடும் மருத்துவ முகாம்கள் 11-ம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 267 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 7846 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பலத்த காற்றினால் 66 மரங்களும், 237 மின் கம்பங்களும் சாய்ந்து உள்ளன. அதுமட்டுமின்றி மழையிலான மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல், வாழை உள்பட 2 ஆயிரத்து 272.58 ஹெக்டர் பரப்பில் பயிர்கள் சேதம் ஏற்பட்டு உள்ளது.

தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 697 ஏரிகள் உள்ளது. இதில் 13 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 24 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 109 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 251 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு கீழ் 300 ஏரிகளும் நிரம்பி உள்ளது. அதேபோல் ஊரக வளர்ச்சித் துறையில் 1257 ஏரிகள் உள்ளது. இதில் 45 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 213 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 337 ஏரிகளும், 26 சதவீதத்திற்கு மேல் 239 ஏரிகளும், மற்ற ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளது.

Similar News