செய்திகள்
கோப்புப்படம்

அரியலூர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2020-11-12 08:45 GMT   |   Update On 2020-11-12 08:45 GMT
அரியலூர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட அரசு பல்துறை வளாகத்திற்கு பின்புறம் தோட்டக்கலைத்துறை மாவட்ட இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலக கதவுகளை மூடிவிட்டு தீவிர சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, வானதி ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அன்பு ராஜனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பாரதிதாசன், பெண் உதவியாளர் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.19 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் கீழப்பழுவூரில் உள்ள தோட்டக்கலை பண்ணை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பண்ணை கேட் பூட்டப்பட்டிருந்ததால் சோதனைக்கு வந்த பெண் போலீசார் சுற்று சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலக குடோனில் மூட்டைகளுக்கிடையில் பணம் வைக்கப்பட்டுள்ளதா? என மூட்டைகளை பிரித்து சோதனை நடத்தினர். அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் ரவிசங்கர் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அன்பு ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் 4 பேரிடமும் சேர்ந்து மொத்தமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News