செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு சமூக இடைவெளியுடன் வரவேற்பு- செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2020-10-28 10:21 GMT   |   Update On 2020-10-28 10:21 GMT
பசும்பொன் குருபூஜை விழாவுக்காக மதுரைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு சமூக இடைவெளியுடன் வரவேற்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா 30-ந்தேதி நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரைக்கு வரும் அவரை வரவேற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். முன்னதாக அவர் மதுரைக்கு வருகிறார். இங்கு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 9 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மதுரையில் முதல்-அமைச்சருக்கு சமூக இடைவெளியுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகிறார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை யார் ஏற்படுத்தினாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சட்டம் தனது கடமையை செய்யும். விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்புவை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே போலீசாரை பாராட்ட வேண்டும், இதுவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒரு உதாரணம் ஆகும். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும், ஒத்த கருத்துடைய கட்சியை கொண்டு கூட்டணி அமைக்கப்படும்.

விஜயகாந்தின் மகன் இளம் தலைமுறை என்கிற நிலையில் பேசி உள்ளார். எந்த ஒரு கூட்டணி கட்சி தலைவரும் முதல்- அமைச்சர் வேட்பாளரை அறிவிக்க கூடாது என சொல்லவில்லை. அ.தி.மு.க.வில் கொள்கை தான் முக்கியம். பதவி எங்களுக்கு துண்டு போன்றது. ஆனால் கொள்கை எங்களுக்கு வேஷ்டி போன்றது, கிராமம் முதல் நகரம் வரை அ.தி.மு.க.வுக்கு வரவேற்பு இருக்கிறது. முதல்-அமைச்சர் அடிக்கும் அனைத்து பந்துகளும் சிக்ஸர்கள் தான். ஆனால் எதிர்க்கட்சிகள் வீசும் பந்துகள் நோ-பாலாக உள்ளது.

எதிர்கட்சிகள் என்பதால் நல்லது செய்தால் கூட ஏதாவது குறை சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். இப்போதைக்கு எங்களுடன் உள்ள கட்சிகளுடன் கூட்டணி தொடருகிறது, கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. நண்பர்கள் தான் கூட்டணி தொடருவது குறித்து முடிவு எடுக்க வேண்டும், கமலுக்கு என்ன சிறப்பாக வருமோ அதை தான் அவர் செய்ய வேண்டும். கமல் சிறந்த நடிகர். எனவே அவர் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News