செய்திகள்
கம்பி வடவேலி தடுப்புகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள்

Published On 2020-10-24 06:39 GMT   |   Update On 2020-10-24 06:39 GMT
சூளகிரி, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் கோபசந்திரம் வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சானமாவு முதல் பீர்ஜேப்பள்ளி வரையில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தொங்கும் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல தளி ஒன்றியம் உனிசேநத்தம் ஊராட்சி தேவர்பெட்டா வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் வராத வகையில் தேவர்பெட்டா முதல் கங்கனப்பள்ளி வரை 4 கிலோ மீட்டர் தூரம் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டள்ள சூரிய மின் வேலி, அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜவளகிரி ஊராட்சி காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் வனப்பகுதியில் சென்னமாளம் முதல் காடு சீவனப்பள்ளி வரை கம்பி வட வேலி, மூங்கில் வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்கும் சின்னையன் ஏரியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தளி ஒன்றியம் தொட்டமஞ்சி ஊராட்சி பிலிகுண்டு கிராமத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறை கேட்டார். அப்போது காவிரி ஆற்றில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் அய்யூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் இருளர் இனமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டார். இந்த ஆய்வின் போது உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) ஜெகதீஸ் எஸ்.பகான், துணை கலெக்டர் அபிநயா, வன உயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார், உதவி கால்நடை டாக்டர் பிரகாஷ், வனச்சரகர்கள் ரவி, நாகராஜ், வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மத்திகிரி மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, காவேரி வன உயிரின காப்பாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News