செய்திகள்
தனி ஆளாக குண்டும் குழியுமான சாலையை சரிசெய்யும் முதியவர்

குண்டும் குழியுமான சாலையை தனி ஆளாக சரிசெய்யும் முதியவர்

Published On 2020-10-19 05:34 GMT   |   Update On 2020-10-19 05:34 GMT
பாகூர்-மாஞ்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்கிறது. இதை சரிசெய்ய என்னால் ஆன முயற்சியை செய்து வருகிறேன் என்று முதியவர் கூறினார்.
பாகூர்:

பாகூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் மேலும் மோசமாகி வருகிறது. குறிப்பாக பாகூர்- கன்னியக்கோவில் சாலை, பரிக்கல்பட்டு - குருவிநத்தம் சித்தேரி சாலை, பாகூர் - மாஞ்சாலை ரோட்டில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, சாலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 83) என்ற முதியவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சாலை வழியாக பாகூருக்கு நடந்தே வந்து செல்வார். இந்த சாலையில் நடக்கும் விபத்துகளை பார்த்து மிகவும் வருந்தினார். காயமடைந்தவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், விபத்து ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் விளைவாக பாகூர் மாஞ்சாலையில் உள்ள பள்ளங்களை, சாலையோரமுள்ள மண், கற்கள் மூலம் நிரப்பி சரிசெய்து வருகிறார்.

இது குறித்து முதியவர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, ‘பாகூர் - மாஞ்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்கிறது. இதை சரிசெய்ய என்னால் ஆன முயற்சியை செய்து வருகிறேன். கடந்த 3 நாட்களாக தனி ஆளாக சாலையோரம் உள்ள மண் மற்றும் கற்களை கொட்டி பள்ளங்களை மூடி வருகிறேன். அரசு செய்யும் என எதிர்பார்த்தால் இப்போதைக்கு ஆகாது. அதனால் நானே முடிந்ததை செய்து வருகிறேன்’ என்று கூறினார்.
Tags:    

Similar News