செய்திகள்
கோப்புப்படம்

சொத்து பிரச்சனையில் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை கடத்தி தாக்கிய மனைவி

Published On 2020-10-09 01:52 GMT   |   Update On 2020-10-09 01:52 GMT
சொத்து பிரச்சனையில் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியே மயக்க மருந்து தெளித்து கணவரை கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூந்தமல்லி:

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் முத்து (வயது 42). இவர், புதுப்பேட்டையில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துவை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரில் காரில் தான் இருப்பதாக உறவினர்களுக்கு முத்து தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற உறவினர்கள், உடலில் காயங்களுடன் காரில் இருந்த முத்துவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முத்து வீட்டுக்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் காயமடைந்த முத்துவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

முத்துவின் மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் தெரிகிறது. கடந்த 1-ந்தேதி கடையில் இருந்த முத்துவை திவ்யா சந்தித்து பேசினார்.

பின்னர் தன்னை காரில் வீட்டில் கொண்டு சென்றுவிடுமாறு கூறினார். அதன்படி காரில் இருவரும் திருமழிசை சென்றவுடன் திடீரென காரை நிறுத்துமாறு திவ்யா கூறினார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் முத்துவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்தனர். இதில் மயங்கிய முத்துவை காரில் வேலூர் கடத்திச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்காக அவரது மனைவியின் உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதற்கிடையில் மாங்காடு போலீசார் தேடும் தகவல் அறிந்ததும் சுதாரித்து கொண்டு முத்துவை காரில் கொண்டு வந்து வண்டலூர் அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதுபற்றி மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம் புதுப்பேட்டை என்பதால் வழக்கை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு மாற்றுவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். சொத்து பிரச்சினைக்காக மனைவியே உறவினர்களுடன் சேர்ந்து கணவரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News