செய்திகள்
விபத்து

திருபுவனை அருகே நடைபயிற்சி சென்ற வாலிபர் கார் மோதி பலி- அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

Published On 2020-09-24 13:23 IST   |   Update On 2020-09-24 13:23:00 IST
திருபுவனை அருகே நடைபயிற்சி சென்ற வாலிபர் கார் மோதி பலியானார். இந்த தகவலை கேட்ட தந்தையும் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்து போனார்.
திருபுவனை:

திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது55) இவர் வில்லியனூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் உத்திரகுமார் (35). இவர் இன்று காலை அதேபகுதியை சேர்ந்த அழகுநாதன்(51), பரசுராமன் (34) ஆகியோருடன் அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளிநேலியனூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது திருபுவனையில் இருந்து மண்டகப்பட்டு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக நடைபயிற்சி சென்றவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உத்திர குமார், அழகுநாதன், பரசுராமன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உத்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அழகுநாதன், பரசுராமன் ஆகிய 2பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கார் விபத்தில் உத்திரகுமார் காயமடைந்து இருப்பதாக தகவல் அறிந்த விநாயகம் தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அப்போது ஆஸ்பத்திரி வாசலில் மகன் இறந்து விட்ட தகவல் அறிந்ததும் விநாயகம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News