செய்திகள்
மெட்ரோ ரெயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்ததை படத்தில் காணலாம்.

மெட்ரோ ரெயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு

Published On 2020-09-10 02:56 GMT   |   Update On 2020-09-10 03:12 GMT
சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து இன்று முதல் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கியது. இதனைதொடர்ந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது.

இந்த வழித்தடத்தில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லை. குறிப்பாக அலுவலக நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் ரெயில் நிலையமும், ரெயில்களும் வெறிச்சோடியே காணப்பட்டன. ஓரிரு நாட்களில் இந்த நிலை மாறி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதாவது 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு இன்று முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பயணிகள் பின்பற்றுவதுடன், ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags:    

Similar News