செய்திகள்
கோப்புப்படம்

திறப்பு விழா கண்ட துணிக்கடைக்கு சில மணி நேரத்தில் மூடுவிழா

Published On 2020-09-05 01:47 GMT   |   Update On 2020-09-05 01:47 GMT
சென்னை ராயப்பேட்டையில் திறப்பு விழா கண்ட துணிக்கடை சில மணி நேரத்துக்குள் பூட்டி சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:

சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக 9 சட்டைகள் ரூ.999-க்கு கிடைக்கும் எனவும், ரூ.9 முதல் டிசர்ட்டுகள் கிடைக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை முதலே சலுகை விலையில் சட்டைகள், டிசர்ட்டுகள் வாங்குவதற்காக குறிப்பிட்ட கடையின் முன்பு இளைஞர்கள் திரண்டனர். கடை திறக்கப்பட்டதும் கூட்டம் கூட்டமாக கடைக்குள் சென்று குவிந்தனர். இளைஞர்கள் கூட்டமாக கூடியதால் பெசன்ட் சாலை பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் அச்சத்துக்கு இடையே சமூக இடைவெளியை மறந்து இளைஞர்கள் கூட்டமாக கூடுவதற்கு காரணமான அந்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். கடையின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ‘இதுபோல மற்ற கடைக்காரர்கள் ஈடுபட்டாலும் நடவடிக்கை பாயும்’ என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் மூடு விழா கண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
Tags:    

Similar News