செய்திகள்
கொரோனா காரணமாக ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டு வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

5 மாதங்களாக சுற்றுலா மையங்கள் மூடல்: வருமானம் இல்லாமல் சிறு வியாபாரிகள் தவிப்பு

Published On 2020-08-24 13:28 IST   |   Update On 2020-08-24 13:28:00 IST
நீலகிரியில் 5 மாதங்களாக சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு உள்ளதால் வருமானம் இல்லாமல் சிறு வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
ஊட்டி:

கொரோனா காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இதனால் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள சுற்றுலாத்தலங்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கின்றன.

சுற்றுலா பயணிகள் யாரையும் அனுமதிப்பது இல்லை. குறைந்த ஊழியர்களை கொண்டு சுற்றுலா தலங்களை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இரண்டாவது சீசன் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாத்தலங்கள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் மற்றும் தொழில் செய்து வந்த சிறு வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

குறிப்பாக சுற்றுலாத்தலங்கள் முன்பு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை வைத்து உல்லன் ஆடைகள், நீலகிரியில் விளையும் பழங்கள், வரிக்கி, சாக்லேட் போன்றவற்றை விற்பனை செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோன்று சுற்றுலா வாகன ஓட்டுனர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் மாற்று வேலைகளுக்கு சென்று வருகிறார்கள்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா காரணமாக கோடைவிழா ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அடுத்த மாதம் தொடங்க உள்ள 2-வது சீசனும் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், சுற்றுலா மையங்கள் தவிர மற்ற பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் மூடப்பட்டு உள்ளதால் ஏராளமானோர் வேலை இழந்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News