செய்திகள்
கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-08-18 14:18 IST   |   Update On 2020-08-18 14:18:00 IST
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் வரவேற்றார். இதில், பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விநாயகர் சதுர்த்தி விழா குழு நிர்வாகிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதித்தால் விழா கொண்டாடாமல் இருப்பதுபோல் இந்தக் கொரோனா தொற்று காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்து முன்னணி வேலூர் கோட்ட பொறுப்பாளர் ராஜேஷ், கோட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் கூறுகையில், வருகிற 22-ந்தேதி வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். அனுமதி கொடுத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம். பின்னர் மேள, தாளத்துடன் ஊர்வலமாகச் செல்லாமல் சிலைகளை கொண்டு சென்று கரைப்போம். அனுமதி கொடுக்காவிட்டால் தடையை மீறி வழிபாடு செய்வோம். அதற்காக, போலீசார் எங்களை கைது செய்தால் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளோம், என்று தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் சக்கரபாணி கூறுகையில், விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இந்து மக்கள் கட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளோம். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி விழா நடத்துவோம், என்றார்.

பா.ஜ.க. வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆ.கே.பாஸ்கர், எஸ்.எல்.பாபு, மாவட்ட துணைத் தலைவர் ஜெகன்நாதன் ஆகியோர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்து அன்றைய தினமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதேபோல் மேலும் பல அமைப்பினர் தங்கள் கோரிக்கைகள், கருத்துகளை பதிவு செய்தனர்.

அனைவரின் கருத்துகள், கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கூறுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும், என்று தெரிவித்தார்.

Similar News