செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

வீட்டில் ரூ.1½ கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவர் கைது

Published On 2020-08-15 03:05 GMT   |   Update On 2020-08-15 03:05 GMT
கடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போது அந்த வீடு பூட்டியே கிடப்பதாகவும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கே.என்.பேட்டை திருப்பதி நகருக்கு சென்றனர்.

அப்போது அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட 7 வகையான புகையிலை பொருட்கள் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 டன் எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்தவர் யார்? என்றும், அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், எந்தெந்த கடைகளுக்கு எல்லாம் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ரூ.1½ கோடி மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்த பாரதி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News