செய்திகள்
திமுக எம்எல்ஏ இதயவர்மன்

திருப்போரூர் திமுக எம்எல்ஏ போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்

Published On 2020-08-10 02:01 GMT   |   Update On 2020-08-10 02:01 GMT
நிலத்தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் நேற்று வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி 2 முறை கையெழுத்திட்டார்.
வேலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் (வயது 46). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமார் தரப்பினருக்கும் இடையே கடந்த மாதம் 11-ந் தேதி நிலத்தகராறில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கீரை வியாபாரி சீனிவாசன் காயம் அடைந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயவர்மன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரை கைது செய்தனர். குமார் தரப்பினரும் கைதானார்கள்.

இந்தநிலையில் இதயவர்மன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, நிலத்தகராறில் தொடர்புடைய 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்தார்.

மேலும் இதயவர்மன் எம்.எல்.ஏ. அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்துக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அளிக்கவேண்டும். அத்துடன் அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், மற்ற 10 பேரும் திருப்போரூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி இதயவர்மன் எம்.எல்.ஏ. நேற்று காலை 10.30 மணியளவில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். எம்.எல்.ஏ. தற்போது தங்கியிருக்கும் ஓட்டல் முகவரியை வடக்கு போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்து உள்ளார். மாலை 5.30 மணிக்கு எம்.எல்.ஏ. மீண்டும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

சென்னை ஐகோர்ட்டு மறுஉத்தரவு தெரிவிக்கும்வரை தினமும் காலை, மாலை வேளையில் இதயவர்மன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அவர் ஓட்டலில் தங்கி இருப்பதை 2 போலீசார் கண்காணித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News