செய்திகள்
கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்திய போது எடுத்த படம்.

ஊரடங்கு நேரத்தில் மீன்பிடி திருவிழா நடத்திய கிராம மக்கள்

Published On 2020-07-05 11:41 IST   |   Update On 2020-07-05 11:41:00 IST
ஊரடங்கு நேரத்தில் மீன்பிடி திருவிழா நடத்திய கிராம மக்களை போலீசார் கலைந்துபோக செய்தனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திற்கு அருகே கரைவெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் 1999-க்கு பிறகு கரைவெட்டி ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை மீன் பிடிக்கும் உரிமையை கிராம மக்களில் ஒருவருக்கு ஏலம் விட்டு கரைவெட்டி ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்த உடன் மீன் வளத்துறை வெளியேறியது.

பின்னர் இந்த ஏரியில் மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டது. கரைவெட்டி ஏரியில் ஆண்டுதோறும் ஏரியில் மக்கள் தண்ணீர் குறையும் போது மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஏரியில் நீர் வற்றும் நேரத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழாவை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்தனர்.

இந்நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் வற்றி குறைந்த அளவே இருப்பதால் மீன்கள் அதிகளவில் செத்து மிதக்க ஆரம்பித்து துர்நாற்றமடிக்க ஆரம்பித்தது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஏரியில் உள்ள தண்ணீர் முழுக்க வற்றி மீன்கள் அனைத்தும் உயிரிழந்து விடும் என்பதால்

வீணாகபோகின்ற மீன்களை நாங்கள் பிடித்துக்கொள்கிறோம் என்று கூறி சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று ஊரடங்கு நேரத்தில் ஏரியில் இறங்கி மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஊரடங்கு நேரத்தில் பலர் ஒன்று கூட கூடாது என கூறி மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்ட கிராம மக்களை கலைந்து போக செய்தனர். இருந்தபோதிலும் கொரோனாவை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் மீனை பிடிப்பதிலேயே கிராம மக்கள் கவனமாக இருந்தனர்.

Similar News