செய்திகள்
விசைப்படகு மீனவர்களுக்கான மருத்துவ முகாம்
கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள். தற்போது பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளி மாவட்டங்களில் இருந்து கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்க வரும் மீனவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்து ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. இதில் ஒரே நாளில் 320 மீனவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதே போன்று வரும் நாட்களிலும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கும் இதேபோன்று பரிசோதனை செய்து கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்ராம், மீன்வள ஆய்வாளர் பாஸ்கர், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி, கடலோர பாதுகாப்பு குழும சார் ஆய்வாளர் ராஜ்குமார், மீன்வள சார் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.