செய்திகள்
காவிரி தண்ணீரை ஆற்றில் இறங்கி மலர் தூவி விவசாயிகள் வரவேற்ற போது எடுத்த படம்.

காவிரி தண்ணீர் கறம்பக்குடிக்கு வந்தடைந்தது- விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

Published On 2020-06-21 10:53 GMT   |   Update On 2020-06-21 10:53 GMT
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கறம்பக்குடிக்கு வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்று வணங்கினார்கள்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும். கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் உழவயல் வாய்க்கால் மூலம் கறம்பக்குடி ஒன்றிய பகுதியை வந்தடையும். இதன் மூலம் கலியரான்விடுதி, காட்டாத்தி, முதலிப்பட்டி, குளத்திரான்பட்டு, கிளாங்காடு, ராங்கியன்விடுதி உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இதன் மூலம் டெல்டா பகுதி விவசாயிகள் 2 போகம் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, பருவ மழை தவறியது போன்ற காரணங்களால் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட வில்லை. இதனால் டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. அங்கிருந்து கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கறம்பக்குடி ஒன்றியம் கலியரான்விடுதி பகுதிக்கு நேற்று வந்தடைந்தது. முன்னதாக ஆற்றில் தேங்காய் உடைத்து தீபம் காட்டி வழிபட்டனர்.

தொடர்ந்து நுரை தள்ளியபடி உருண்டோடி வந்த காவிரி தண்ணீரை மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- “நடந்தாய் வாழி காவிரி” என புலவர்களால் போற்றி புகழப்படும் காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் திறந்து விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உழவியர் கிளை வாய்க்கால் மூலமே கறம்பக்குடி பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற முடியும். எனவே கடைமடை பகுதி விவசாயிகளும் பயன் பெறும் வகையில், அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க வேண்டும். கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள டெல்டா பாசன ஊராட்சிகளில் பாசன குளங்கள் அனைத்தையும் சீரமைத்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். எனவே அனைத்து குளங்களும் நிரம்பும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வந்தடைந்தது. மேற்பனைக்காடு கிராமத்தில் கால்வாயில் வந்த தண்ணீருக்கு மலர்கள், நவதானிய விதைகள், பழங்களுடன் வரவேற்பு கொடுத்த விவசாயிகள், இளைஞர்கள் கற்பூரம் ஏற்றி வணங்கி வரவேற்றனர். அதே போல பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மலர் தூவி வரவேற்றனர்.
Tags:    

Similar News