செய்திகள்
அரச மரத்துடன் இணைந்த பனைமரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் வேருடன் பிடுங்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

அரச மரத்துடன் இணைந்த பனைமரம் : வேருடன் பிடுங்கி சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நட்ட இளைஞர்கள்

Published On 2020-06-20 20:03 IST   |   Update On 2020-06-20 20:03:00 IST
அரச மரத்துடன் இணைந்த பனைமரத்தை வேருடன் பிடுங்கி சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நட்ட இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் 20 ஆண்டு கால அரச மரத்துடன் இணைந்த பனை மரம் இருந்தது. அவர் அந்த இடத்தில் வீடு கட்ட இருந்ததால் மரங்களை காப்பாற்றும் நோக்கத்துடன் சோலைவனத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு மரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நட்டுவைக்க அனுமதி பெற்றனர்.

அதன்படி நக்கம்பாடி ஊர் தலைவரின் உதவியோடு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மரங்களை வேரோடு பிடுங்கி அதிலுள்ள கிளைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் வாகனத்தில் ஏற்றி சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு அரியலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரத்தை நட்டனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.

பின்பு இதை பற்றி சோலைவனம் இளைஞர்கள் தெரிவிக்கையில், சாலை விரிவாக்கத்துக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்கள் கொத்து கொத்தாக சர்வ சாதாரணமாக வேராடு வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அரை மணி நேரத்தில் அரை நூற்றாண்டு கால மரத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீழ்த்துவதை கண்டு இயற்கை ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர். அதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த ‘சோலைவனம்’ இளைஞர்கள் ஒன்றிணைந்து குழுவை அமைத்து பெரிய மரங்களை வேரோடு அகற்றி, அவற்றை வேறு இடத்தில் நட்டுவருவதாக கூறினர்.

ஒரு கன்று மரமாகி நிற்க ஆண்டுக்கணக்கில் ஆகும்.

அதே நேரம் வெட்டப்படவிருக்கும் வளர்ந்த மரத்தின் உயிரை பறிபோகாமல் காத்து, அதை அப்படியே இடம்மாற்றி நட்டுவைத்து நன்கு பராமரித்து வளர்த்தெடுப்பது இங்கு புது முயற்சிதான். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அரியலூர் மாவட்டத்தில் சோலைவனம் இளைஞர்கள் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் கன்றுகள் நட்டு பராமரித்து வருவதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Similar News