செய்திகள்
கொரோனா வைரஸ்

கொள்ளிடம் பகுதியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா

Published On 2020-06-16 14:02 IST   |   Update On 2020-06-16 14:02:00 IST
கொள்ளிடம் பகுதியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.
கொள்ளிடம்:

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு சென்னையில் இருந்து சிலர் வந்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் பகுதிக்கு வந்த சிலர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் வீட்டிலேயே தங்கியிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில் கோதண்டபுரம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேருக்கும், வெட்டாத்தங்கரை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேருக்கும், மணலகரம், கீராநல்லூர், வழுதலைக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 9 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொள்ளிடம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் இருந்து வருபவர்களால் கொள்ளிடம் பகுதியில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவே கொள்ளிடம் சோதனைச்சாவடி வழியாக வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News