செய்திகள்
பட்டு சேலை

காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை கடைகள் திறப்பு

Published On 2020-05-21 13:16 IST   |   Update On 2020-05-21 13:16:00 IST
காஞ்சிபுரத்தில் மீண்டும் பட்டுச்சேலை விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பட்டுச்சேலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமல் சமூக இடைவெளியுடன் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து பட்டுச்சேலை விற்பனைக்கு பெயர்பெற்ற காஞ்சிபுரத்தில் மீண்டும் பட்டுச்சேலை விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற கடைகளும் திறக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் அரசு பட்டுச்சேலை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவில் வந்து செல்கிறார்கள்.

உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டு விசே‌ஷங்களுக்கு தேவையான பட்டு சேலைகள் வாங்க ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பட்டுச்சேலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தனியார் பட்டுச்சேலை விற்பனை கடைகள் பெரும்பாலும் திறக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து தொடங்கப்படாததால் வெளியூர் வாடிக்கையாளர்கள் வருவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர்கள் இன்னமும் கடைகளை திறக்கவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜவுளிக் கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜவுளிக்கடைகள் இருந்தால் திறக்கக்கூடாது . ஏ.சி. இல்லாத கடைகளை மட்டும் திறக்கலாம். ஒருவேளை ஏ.சி. எந்திரங்கள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது .

காலை 10 மணி முதல் 7 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் . விற்பனை நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News