செய்திகள்
மரணம்

கந்தர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் மயங்கி கிடந்த சிறுமி பலி

Published On 2020-05-19 07:27 IST   |   Update On 2020-05-19 07:27:00 IST
கந்தர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் நேற்று மதியம் 14 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மயங்கி கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மயங்கி கிடந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் என தெரியவந்தது. மேலும் அவர் பாப்பான்குளம் பகுதியில் தண்ணீர் எடுக்க சென்றதும், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தைல மரக்காட்டில் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. அவரை மர்மநபர்கள் தைல மரக்காட்டிற்குள் கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மார்சல் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News