செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- நாராயணசாமி உத்தரவு

Published On 2020-05-14 08:32 GMT   |   Update On 2020-05-14 08:32 GMT
புதுவை தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை. 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளோம்.



பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும். எந்தெந்த துறைக்கு கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி வருகிறது.

புதுவையில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம், கட்டட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கொடுத்துள்ளோம். டெல்லி சென்று வந்தவர்களால் இங்கு கொரோனா வந்ததுபோல், கோயம்பேடு மார்க்கெட்டால் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொரோனா பரவியுள்ளது. நமது எல்லையை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் சிறப்பாக பணியாற்றி வருவதால், பெரிய அளவில் பாதிப்பு இன்றி உள்ளோம். மாலை நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் கடை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.

கொரோனா பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News