செய்திகள்
பரிசோதனை

குன்னூர் திரும்பிய டிரைவர்கள், கிளினர்கள் உள்பட 11 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை

Published On 2020-05-04 09:44 IST   |   Update On 2020-05-04 10:17:00 IST
கோயம்பேடு சென்று குன்னூருக்கு திரும்பிய டிரைவர்கள், கிளினர்கள் உள்பட 11 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
குன்னூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி, இறக்கி வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைகளில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று குன்னூர் லெவல் கிராசிங்கில் தாசில்தார் குப்புராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து குன்னூர் பொது வினியோகத்துறைக்கு அரிசி ஏற்றி லாரி வந்து இருப்பதாகவும், அதனை இறக்கி கொண்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வருவாய்த்துறையினர், போலீசார் அந்த இடத்துக்கு சென்று லாரி டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து குன்னூருக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த 7 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. உடனடியாக அதன் டிரைவர்கள், கிளினர்கள் உள்பட 11 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்த பிறகு லாரிகள் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News