செய்திகள்
கூடலூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி விட்டு ஓவேலிக்கு பெண்கள் நடந்து செல்லும் காட்சி.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க 20 கி.மீ. தூரம் நடந்து செல்லும் ஓவேலி பகுதி மக்கள்

Published On 2020-04-27 09:42 IST   |   Update On 2020-04-27 09:42:00 IST
அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஓவேலி பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கூடலூர்:

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு மளிகை, காய்கறி கடைகள் கிடையாது. இதன் காரணமாக அவர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கு அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவேலி பேரூராட்சி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடலூருக்கு நடந்து வர வேண்டி உள்ளது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை கடந்து தலைச்சுமையாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து ஓவேலி பகுதி மக்கள் கூறியதாவது:-

இங்கு பெரும்பாலும் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தோட்ட நிர்வாகங்கள் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்துகின்றனர். ஆனால் எங்கள் பேரூராட்சியில் ஏ.டி.எம். வசதி கிடையாது. மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் கிடையாது. அதற்கு கூடலூருக்கு சென்று வர வேண்டி உள்ளது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அரசு பஸ்கள் ஓடவில்லை. மேலும் வாடகை ஆட்டோக்கள், ஜீப்புகளும் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூருக்கு நடந்து சென்று வர வேண்டி உள்ளது.

சில நேரங்களில் வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே தோட்ட நிர்வாகங்கள் எங்களது சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் எங்கள் பேரூராட்சி பகுதியிலேயே கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News