செய்திகள்
போக்குவரத்து அதிகரித்து இருப்பதையும் படத்தில் காணலாம்.

ஊரடங்கை மீறி கூடலூரில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

Published On 2020-04-22 04:31 GMT   |   Update On 2020-04-22 04:31 GMT
ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகரித்து வருகிறது.
கூடலூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகரித்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர மற்ற கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.

இது தவிர ஆட்டோக்களும் இயக்கப்பட்டது. சாலைகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் செல்வதை காண முடிந்தது. கூடலூர்-கோழிக்கோடு சாலையின் இருபுறமும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நகருக்குள் குழந்தைகளுடன் பொதுமக்கள் நடந்து செல்லும் அலட்சியத்தையும் காண முடிந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கொரோனா வைரசின் தாக்கத்தை பலர் உணர்ந்ததாக தெரியவில்லை. போலீசாரின் கண்காணிப்பையும் மீறி சிலர் தேவையின்றி சுற்றுகிறார்கள். இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News