செய்திகள்
காய்ச்சல் உள்ளதா? என தானியங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர்- ஊட்டி இளைஞர் அசத்தல்

Published On 2020-04-10 09:45 IST   |   Update On 2020-04-10 09:45:00 IST
ஊட்டியை சேர்ந்த இளைஞர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார்.
ஊட்டி:

ஊட்டியை சேர்ந்த ஆனந்த்(வயது 26) என்பவர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார். இந்த கருவியை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி ஆகியோர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து சோதனை அடிப்படையில் முன்னோட்டமாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வருகிறவர்களுக்கு கருவியில் பதிவாகும் வெப்ப அளவை கணக்கீட்டு, அதன்பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது:-

நான் பி.இ., எம்.இ. படித்து முடித்து உள்ளேன். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதை கருத்தில் கொண்டு தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவியை வடிவமைத்தேன். ஸ்கேனர் கருவி முன்னால் நெற்றியை கொண்டு சென்றால், உடல் வெப்பத்தை தானாக அளவீடு செய்து திரையில் காண்பிக்கும். பரிசோதனை மேற்கொள்பவரின் அருகில் நின்று செவிலியர்கள் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கருவியோடு இணைக்கப்பட்டு 2 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் திரையில் பார்த்து உடல் வெப்ப அளவை தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்தவாறே பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவேட்டில் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பரிசோதனை செய்பவருக்கும், அதனை கண்காணிப்பவர்களுக்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வைரஸ் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த கருவியை 50 மீட்டர் தொலைவில் இருந்து கண்காணிக்கும் வசதி உள்ளது. உடல் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை தாண்டி செல்லும் போது, பொருத்தப்பட்டு உள்ள சிவப்பு விளக்கு எரிந்தும், ஒலி எழுப்பியும் தெரிவிக்கும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து டாக்டரை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News