கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி பேராலயம் வெறிச்சோடியது
நாகப்பட்டினம்:
உலக நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக கோவில், தேவாலயம், பேருந்து நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் நிலவுவதால் மக்கள் அச்சத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கீழ்வேளூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.
இங்கு தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. வேளாங்கண்ணி தமிழகத்திலும், இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
எல்லா சமயங்களை சேர்ந்த திருப்பயணிகளும் அங்கு சென்று, அன்னை மரியாவிடம் பிரார்த்தனை செய்து, காணிக்கைகள் அளித்து, ஜெபங்கள் ஒப்புக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது.
கடைகள், பேருந்து நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்ததால் வேளாங்கண்ணியில் மெழுகு வர்த்தி, பூ மாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் வெறிச் சோடிஉள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தற்போது கிறிஸ்தவர்களின் பண்டிகையான தவக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வேளாங்கண்ணிக்கு ஆண்டு தோறும் அதிக அளவு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தில் வேளாங்கண்ணி பேராலயம் பக்தர்கள் கூட்டமின்றி காணப்படுகிறது.
அதிகளவு பக்தர்கள், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பாத்த்து காத்திருந்த வியாபாரிகளுக்கு கொரோனோ அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.