செய்திகள்
குடிநீர் உறிஞ்சும் மோட்டாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

17 ஆண்டுகளாக குடிநீரை உறிஞ்சி விற்பனை செய்த கதிர் ஆனந்த் எம்.பி.

Published On 2020-03-03 13:48 IST   |   Update On 2020-03-03 13:48:00 IST
காட்பாடி அருகே கதிர்ஆனந்த் எம்.பி.க்கு சொந்தமான குடிநீர் நிறுவனத்தில் 17 ஆண்டுகளாக போர்வெல் மூலம் குடிநீர் உறிஞ்சி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடி முதல் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இதையடுத்து சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை மூடி சீல் வைத்து மார்ச் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் 37 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்நாளில் 24 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று மேலும் 8 நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழு இணைந்து சீல் வைத்தனர்.



இதில் காட்பாடி அருகே உள்ள கசம் கண்டிப்பேடு பகுதியில் இயங்கி வரும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான அருவி என்ற குடிநீர் நிறுவனத்தில் போர்வெல் பம்ப் குழாய் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நிறுவனம் கதிர்ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கதிர்ஆனந்த் எம்.பி. குடும்பத்திற்கு சொந்தமான இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இருந்து குடிநீர் போர்வெல் மூலம் உறிஞ்சி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் கிராமங்களுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. ஆனால் மாவட்டத்தில் 37 குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 90 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான குடிநீர் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News