செய்திகள்
சென்னை விமான நிலையம்

விமான நிலையத்தில் அதிகாரிகளை தாக்கி தப்பிய 50 பேரை பிடிக்க வேட்டை

Published On 2020-02-21 08:54 GMT   |   Update On 2020-02-21 08:54 GMT
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளை தாக்கி தங்கம் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவிய 50 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியா, துபாய், இலங்கையில் இருந்து வந்த பயணிகள் சுங்க அதிகாரிகள் சோதனை முடிந்து வெளியே வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தனர்.

இதில் 18 பயணிகள் ரூ.5½ கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து 18 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் தங்கம் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் ‘குருவிகள்’ என்பது தெரிந்தது.

அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு செல்ல விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது அங்கிருந்த கடத்தல்காரர்களின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்த 18 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அதிகாரிகளை தாக்கிய 50 பேர் கும்பலும் ஓட்டம் பிடித்தனர்.

இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே தப்பி ஓட்டம் பிடித்த தங்கம் கடத்தல்காரர்களில் 13 பேர் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தலைமறைவாக உள்ள 8 கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அதிகாரிகளை தாக்கி தங்கம் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவிய 50 பேர் கும்பலை பிடிக்கவும் வேட்டை நடந்து வருகிறது.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து மேலும் நடவடிக்கை எடுக்க மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதற்கு இந்த கும்பலே காரணம் என்று தெரிகிறது. அவர்களை கூண்டோடு பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே தங்கம் கடத்தி வருபவர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விமான நிலைய 2 சுங்க இலாகா அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News